Filed Under (Uncategorized, சினிமா) by கதிர் சயந்தன் on July-31-2008

இடம் கிளிநொச்சியில் ஒரு மண்டபம்

காலம் சமாதானம் கண்ணாமூச்சி ஆடிய, வந்தவர்கள் பத்திரமாகத் திரும்பிச் செல்ல முடிந்த ஒரு வருடம் மேடையில் இயக்குனர் பாரதிராஜா உரையாற்றிக் கொண்டிருக்கிறார். ஆக்ரோசமான பேச்சு. அனல் வார்த்தைகளில் பறக்கிறது. அமைதியாக உட்கார்ந்திருக்கிறது மக்கட் கூட்டம். மேடையில் பேசும் போது முன்னிருக்கும் மக்கட் கூட்டத்தை கற்களாக உருவகப் படுத்தி கொள்ளச் சொல்வதுண்டு. இங்கு கற்களே மக்களாக இருப்பது போன்ற தோற்றம்.

கால்மணி நேரம் கடக்கிறது. அரைமணி நேரம்… முக்கால் மணி நேரம் இதற்கு மேல் பாரதிராஜாவால் பொறுத்துக் கொள்ள முடியவில்லைப் போலும்.

“என்ன ஜென்மங்களய்யா நீங்க.. நான் ஒருத்தன் இங்கே பேசிக்கிட்டே இருக்கிறேன். யாராவது கை தட்டினீர்களா.. ´´ என அவர் தன் ஆதங்கத்தைக் கொட்டி விட்டார்.

இதில் பாரதிராஜாவின் தவறொன்றும் இல்லை. தமிழ் நாட்டு மேடையொன்றில் என் இனிய தமிழ் மக்களே என அவர் ஆரம்பிக்கும் போதே விசில் பறக்கும். பேச்சினிடை இடையே கை தட்டுவதற்கென்றே அவரும் இடைவெளி விட வேண்டியிருந்திருக்கும்.

கிளிநொச்சியில் நிலைமை தலைகீழாக இருந்தது. அங்கிருந்தவர்களை உணர்ச்சியற்ற ஜடங்கள் என பாரதிராஜா நினைத்திருக்கவும் கூடும்.

இந்தச் சம்பவத்தை நினைவு படுத்தி இலங்கைத் தமிழர்கள் உணர்ச்சியற்றவர்களா என அகிலனிடம் கேட்டேன். இந்தக் கேள்வி இப்போ ரொம்ப முக்கியம் என அகிலன் நினைத்திருக்கக் கூடும். வெற்றுப் பேச்சுக்களுக்கெல்லாம் நாங்கள் உணர்ச்சி வசப்படுவதில்லையென பெருமையாகச் சொல்லிக் கொள்ளலாம் என்றார் அவர். மற்றும்படி உண்மையென்னவென்றால் ஆக்ரோசமானதும் வீரம் கொப்பளித்து குதித்தோடும் வகையிலானதுமான இவ்வாறான மேடைப் பேச்சுக்கள் திராவிட இயக்கங்களினது வருகையோடு தமிழகத்தில் ஒரு அரசியல் கலாசாராமாகி விட்டன. அந்த மக்கள் அதற்குள் பழக்கப் படுத்தப் பட்டு விட்டனர். புரட்சிகரக் கருத்துக்கள் காலம் காலமாக அனல் தெறிக்கும் பேச்சுக்களூடாகவே ஊட்டப் பட்டன அன்றி புரட்சிகரமான செயற்பாடுகள் மூலமாக அல்ல.

(வெறும்) பேச்சுக்களில் மக்கள் மகிழ்வுறுகிறார்கள் என்பதன் அடையாளம் தான் அங்கு அவற்றுக்கு கிடைக்கும் கை தட்டல்களும் வரவேற்பும்.

இலங்கையில் தமிழர் பகுதிகளில் 80 களின் பிற்பாடு அரசியல் கூட்டங்கள் அற்றுப் போய் விட்டன. அரசியல் கட்சிகளே இல்லையாம் கூட்டமென்ன கூட்டம். அதற்கு முன்பு தமிழர் விடுதலைக் கூட்டணியின் மேடைகளிலும் அனல் பறக்கும் எனக் கேள்விப் பட்டிருக்கிறேன். 80களோடு வெறும் பேச்சுக்கு முடிவு கட்டிவிட்டு செயற்படத் தீர்மானித்து விட்ட பிறகு இத்தகைய ஆக்ரோசமான பேச்சுக்கள் மக்களுக்கு புதியனவாகின.

கொஞ்சக் காலத்திற்கு முன்பு விஜய் டி ராஜேந்தர் குமுதம்.கொம்மில் விடுதலைப் புலிகளைப் பற்றிப் பேசியிருந்ததைக் கேட்ட போது எனக்கு ஈரக்குலையே நடுங்கியது. புலிகளின் பரப்புரைக் கூட்டங்களில் கூட அப்படி யாரும் பேசி நான் கேட்டதில்லை. அப்போது யாரோ நகைச்சுவைக்குச் சொன்னது நினைவுக்கு வருகிறது. ராஜேந்தரின் உரையை பிரபாகரன் கேட்டால் அடுத்த கணமே சண்டையைத் தொடங்கிடுவார்( அப்போது யுத்த நிறுத்தம் அமுலில் இருந்தது)

நானும் சும்மா நினைத்துப் பார்த்தேன். டி ராஜேந்தரைப் போலவே பிரபாகரன் பேசினால் எப்படியிருக்கும்? நல்லவேளையாக காலம் அவ்வாறில்லாமல் கவனித்துக் கொண்டது.


* * *


பாரதிராஜா நம் மக்களுக்காக படம் செய்யவில்லை பாலு மகேந்திரா செய்யவில்லை என்ற ஒரு புறு புறுப்பு நம்மில் சிலருக்கு உண்டு. இதனை நினைவுபடுத்திக் கொண்டே சொல்ல விழைகிறேன்.

டென்மார்க்கில் இருந்து ஈழத்தமிழர் சிலரின் தயாரிப்பில் உருவான இளம்புயல் என்ற படத்தின் இசை வெளியீடு சென்னையில் அண்மையில் நடந்தது. அதன் ஒளித்துண்டுகளை பார்க்கக் கிடைத்தது. அந்தப் படத்தை நான் பார்க்கவில்லை. ஆனால் அவர்கள் தயாரித்த பூக்கள் என்ற சினிமாவினை இடையில் கண்டபடி திட்டிக் கொண்டே எழுந்து செல்லும் வரை பார்த்தேன். (கணணியில்தான்)

ஹீரோயிசம் பாய்ந்தோடும் இளைஞர்கள் அவர்களுக்கு பயந்தோடும் வில்லன்ஸ் அப்புறம் காதலிக்கவும் பாடல்களுக்கும் ஒரு பெண் கொஞ்சம் துப்பாக்கிகள் என நீளும் கதை அது. அந்தப் பெண் வெள்ளைக் காரப் பெண். வெளிநாடுகளில் கமெராவும் கணணியும் கிடைத்தால் தயாராகும் நம்மவரின் மூன்றாம்தரப் படங்களில் கதாநாயகிகள் பெரும்பாலும் வேற்று இன அழகிகளாகத் தான் இருக்கிறார்கள். இதனை நான் தொடர்ச்சியாகக் கவனித்திருக்கிறேன். இதைப் பற்றி கனடாவில் படமெடுத்துத் திரியும் நண்பரிடம் கேட்டிருந்தேன். அவர் நடித்திருந்த ஒரு படத்தில் (அவரது முதலாவது படத்திற்கு நிகழ்ந்த சோகம் சுவாரசியமானது. படத்தின் பாடல்கள் வெளியிட்ட பிறகு பெரும்பாலும் படப்பிடிப்புகள் நிறைவடைந்த பின்னர் இயக்குனருடனான வீட்டுச் சண்டையில் இயக்குனரின் மனைவி படத்தின் மூலப் பிரதிகளை தீ மூட்டிக் கொழுத்தி விட்டாராம். அத்தோடு படம் ப்ளாப்) கதாநாயகி கானா நாட்டைச் சேர்ந்தவராயிருந்தார். ஏனெனில் நெருக்கமான காட்சிகளில் நமது இலங்கைத் தமிழ் பெண்களை ஈடுபடுத்துவது நமது கலாசாரத்திற்கு ஒவ்வாதாம். இந்தக் கணத்தில் என் வாயில் வருவதை எழுதினால் அது தமிழ்மணத்தில் **** என்றவாறு இருக்கும்.

மேற்சொன்ன பூக்கள் திரைப்படக் குழு தயாரிக்கும் படம் இளம்புயல். இயக்குனர் தயாரிப்பாளராகவும் இசையமைப்பாளர் கதாநாயகனாகவும் நடிக்கும்? குடும்பப் படம். (குடும்பப் படம் என்றால் குடும்ப உறுப்பினர்களே தயாரிக்கும் படம்) இசை வெளியீட்டு விழாவில் அமீர் ஆர் பி செளத்ரி உட்பட சில திரை பிரமுகர்கள் வந்திருந்தார்கள். தயாரிப்பாளர் தனது உரையில் இலங்கையில் தமிழர்களின் போராட்டத்திற்கு சிங்கள இராணுவம் காரணமில்லை. தமிழ் நாட்டு திரைப்படங்கள் தான் காரணம் எனச் சொல்லி விட்டு ஒரு லுக் விட்டார். பார்வையாளர்களை யோசிக்க வைக்கிறாரோ என்னவோ?

பிறகு வீரபாண்டிய கட்டப்பொம்மனையும் மனோகராவையும் இன்ன பிறவையும் பார்த்துத்தான் நாங்கள் போராட்ட குணம் கொண்டோம் என்றார். நல்ல வேளை இந்த வரிசையில் போக்கிரி குருவி வீராசாமி படங்களைச் சேர்க்காமல் விட்டார். தமிழ் சினிமாவில் நுழைந்து விட்டார். இனி இப்படியெல்லாம் பேசித்தானே தீர்க்க வேண்டும். அவர் தேவை அவருக்கு. அதை விட்டு விடுவோம்.

அந்நிகழ்வில் அமீரின் பேச்சுத்தான் கவனத்திற்குரியது. அமீர் சொல்கிறார். நாயகிகளுக்குப் பின்னால் ஓடித்திரியும் நாயகர்களைக் கொண்ட தமிழ் சினிமாவை கொஞ்சங் கொஞ்சமாக மாற்ற என்னைப் போன்றவர்கள் முயற்சிக்கிறோம். ஆனால் நீங்கள் திரும்பவும் நாயகியைத் துரத்துவது மரத்தைச் சுற்றிப் பாடுவது மாதிரியான ஜிகினா காலத்திற்கு செல்வது கவலை தருகிறது.

அந்த நிகழ்வில் வைத்து அமீர் ஈழத்து மக்களில் வலியை சினிமாவில் பதிவு செய்வேன் என்றார். அவ்வாறு செய்யவில்லையானாலும் அவரை எந்த ஈழத்துக் கொம்பனும் கேள்வி கேட்க முடியாது. தயாரிக்கும் வசதியும் இயக்கும் வசதியும் இசையமைக்கும் வசதியும் நடிக்கும் வசதியும் பெற்ற எங்களாலேயே வலியைப் பதிவு செய்ய வக்கில்லை. இந்த லட்சணத்தில் அமீரும் பாரதிராஜாவும் பாலுமகேந்திராவும் வந்து பதிவு செய்ய வேண்டுமா?

என்ன ஜென்மங்கள் என பாரதிராஜாவே கூறியிருந்த போதும் அது இப்பதிவின் இரண்டாவது பத்திக்கான தலைப்பாகவே நான் கொள்கின்றேன்.

Tags: அமீர், இளம்புயல், சினிமா, பாரதிராஜா
இவ்விடுகையோடு தொடர்புடைய வேறும் சில


Filed Under (எழுத்து, பார்வைகள்) by கதிர் சயந்தன் on July-29-2008


இலங்கையில் இருந்து வெளியாகும் தினக்குரல் பத்திரிகை தொடர்ச்சியாக வலைப்பதிவுகளை அறிமுகப்படுத்தி வருகிறது. பத்திரிகையின் அரைப் பக்கத்தை அதற்காகச் செலவழிப்பது இலங்கையின் சில வயதான இலக்கிய வாதிகளுக்கு புறுபுறுப்பை ஏற்படுத்துவதாக அறிந்தேன். ஆனாலும் விரிந்த ஒரு அறிமுகத்தை அவ்வாறு வழங்குவது பதிவர்களுக்கு உற்சாகம் தரும் செயற்பாடுதான். பதிவரின் போட்டோ வேறு போடுகிறார்களில்லையா..

கடந்த ஞாயிறு தினக்குரல் வார இதழில் சாரல் வலைப் பதிவு அறிமுகம் வெளியானது. அதன் பிரதிகளை இணைத்திருக்கிறேன்.

கொழும்பிலிருந்து ஒருவர் அம்மாவிற்கு தொலைபேசியெடுத்து உங்கடை மகன்ரை படம் பேப்பரில வந்திருக்கு எனச் சொல்லவும் அம்மா என்னமோ ஏதோ தேடுறாங்களோ என பயந்து விட்டா..

சோமிதரன் இங்கே எங்கு வந்தார் என நிறைய பேர் கேட்கினம். நான் என்ன பதிலைச் சொல்ல.. ?

நன்றி : தாட்சாயினி.. (பிறகு அவ நன்றி சொல்லி போடுவது நல்ல பழக்கம் என கண்டனம் செய்வா)

Tags: சயந்தன், தினக்குரல், வலைப்பதிவு
இவ்விடுகையோடு தொடர்புடைய வேறும் சில


Filed Under (ஒலிப்பதிவுகள்) by கதிர் சயந்தன் on July-18-2008

விளக்கம் தேவையில்லைத்தான். இருந்தாலும் …
பாடலின் இறுதியில் தக்கதொரு தலைவன் உண்டு தளபதிகள் வீரர் உண்டு என வரும் வரி விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனையும் அவரது இராணுவ தளபதிகளையும் வீரர்களையுமே பாடலில் குறித்து நிற்கிறது.

Tags: கடல், பாடல், மீனவர்
இவ்விடுகையோடு தொடர்புடைய வேறும் சில



FireStats icon Powered by FireStats